ஆதாரின் அம்சங்கள் மற்றும் பயன்கள் என்ன?

ஒற்றை ஆதார்: ஆதார் தனித்துவமான எண் ஆகும். இது வசிப்பாளர்களின் உடற்கூறுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அரசுத் திட்டங்களின் பயன்கள் முறைகேடான வழிகளில் சுரண்டப்படுவதற்கு காரணமான போலி மற்றும் புனையப்பட்ட அடையாளங்களை அடையாளம் கண்டுபிடித்து விடும் என்பதால் எந்த வசிப்பாளரும் போலி அடையாள எண்ணை வைத்திருக்க முடியாது. ஆதார் வழி அடையாளக் கண்டுபிடிப்பின் மூலம் போலிகள் நீக்கப்படுவதால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு பிற தகுதியுடைய வசிப்பாளர்களுக்கு பயன்களை விரிவுபடுத்த அரசால் முடியும்.
எங்கும் பயன்படுத்தும் தன்மை: ஆதார் என்பது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக் கூடிய எண் ஆகும். அதனால் சேவை வழங்கும் முகமைகள் பயனாளியின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்காக இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் மத்திய தனித்துவ அடையாள தகவல் தொகுப்பை தொடர்பு கொள்ளலாம்.
எந்த அடையாள ஆவணமும் இல்லாதவர்களையும் சேர்க்கலாம்: ஏழைகளுக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் பயன்கள் கிடைப்பதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், அரசின் சலுகைகளை பெறுவதற்கான அடையாளச் சான்றுகள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது தான். ஆதார் வழங்குவதில் ஒருவரைப் பற்றிய விவரங்களை சரிபார்க்க அறிமுகம் செய்து வைப்பவர் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், அடையாளச் சான்று இல்லாதவர்களும் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க ஆதார் உதவுகிறது.
மின்னணு பயன்மாற்றங்கள்: ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலமாக வசிப்பாளர்களுக்கான பயன்களை, குறைந்த செலவில், மிகவும் பாதுகாப்பான முறையில் நேரடியாக அவர்களுக்கே அனுப்ப முடியும். இதனால் இப்போது பயன் வழங்குவதற்கு ஆகும் அதிக செலவை குறைக்க முடியும். அதுமட்டுமின்றி, இப்போதைய முறையில் உள்ள முறைகேடுகளும் தடுக்கப்படும்.
பயனாளிகளுக்கு பயன் சென்றடைந்ததை உறுதி செய்ய ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறை: வசிப்பாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க விரும்பும் முகமைகளுக்கு சரிபார்ப்பு சேவைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. அரசின் சலுகைகள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய இது உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை மூலம் சேவைகளும் மேம்படுத்தப்படுகின்றன. தெளிவான பொறுப்புடைமையும், வெளிப்படைத்தன்மை கொண்ட கண்காணிப்பும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளின் தரத்தையும், அதை பெறும் முறையையும் குறிப்பிடத்தக்கவகையில் மேம்படுத்தும்.
வசிப்பாளர்களுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் வழங்கும் சுயசேவை முறை: ஆதாரை சரிபார்க்கும் அமைப்பாக பயன்படுத்தி, வசிப்பாளர்கள் தங்களுக்குரிய சலுகைகளை அறிந்து கொள்ள முடியும். தங்களிடமுள்ள செல்பேசிகள், சேவை மையங்கள் மற்றும் பிற வழிகளில் தங்களுக்கான தேவைகளைக் கேட்டுப் பெறவும், தங்களின் குறைகளை களைந்து கொள்ளவும் முடியும். வசிப்பாளர்கள் தங்களிடமுள்ள செல்பேசி மூலமாகவே சுய சேவை பெறும்போது இருவழி சரிப்பார்ப்பு (வசிப்பாளரின் பதிவு செய்யப்பட்ட செல்பேசி அவரிடம் இருப்பதை உறுதி செய்வது, அதன்வழியாக ஆதார் கடவுச் சொல்லை அனுப்பி உறுதி செய்வது) மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நடைமுறைகள் செல்பேசி வழி வங்கிச் சேவை மற்றும் பணம் வழங்கலுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை ஆகும்.