வசிப்பாளரின் தனிமையுரிமையை பாதுகாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது?

தனிநபர்களைப் காப்பதும், அவர்களின் தகவல்களை பாதுகாப்பதும் தான் தனித்துவ அடையாளத் திட்டத்தின் உள்ளார்ந்த வடிவமைப்பு ஆகும். ஒருவரின் அடையாளத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்காத, எளிதில் யூகிக்கமுடியாத எண்ணை ஆதாராக வழங்குவதில் தொடங்கி, கீழே தரப்பட்டுள்ள மற்ற அம்சங்கள் வரை வசிப்பாளரின் நலன்களைப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகவும், பயனாகவும் தனித்துவ அடையாள திட்டம் கொண்டிருக்கிறது.
  • குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் பெறுதல்:
    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி பெற்றோர்/காப்பாளர் பெயர் (குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகும்; மற்றவர்களுக்கு தேவையில்லை) புகைப்படம், விரல் ரேகை, கருவிழிப் படலப் பதிவு ஆகியஅடிப்படைத் தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது.
  • சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுவதோ, கண்காணிக்கப்படுவதோ இல்லை:
    மதம், ஜாதி, சமுதாயம், வகுப்பு, இனம், வருமானம், உடல்நிலை போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கொள்கை அனுமதிப்பதில்லை. எனவே, தனித்துவ அடையாள அமைப்பின் மூலமாக தனிநபர்களின் தகவல்களை தொகுப்பது சாத்தியமல்ல.
  • ஆம் அல்லது இல்லை என்ற வடிவில் தான் பதில் கிடைக்கும்:
    ஆதார் தகவல் தொகுப்பில் உள்ள தனிநபர் விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவிக்காது. மாறாக ஒருவரின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான வேண்டுகோள்கள் வந்தால் அதற்கு ஆம் அல்லது இல்லை என்ற அடிப்படையில் தான் பதில் வரும்.
  • இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவல்களை மற்ற தகவல் தொகுப்புகளுடன் இணைத்தல் மற்றும் சேர்த்தல்:
    தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு வேறு எந்த தகவல் தொகுப்புடனோ அல்லது வேறு தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களுடனோ இணைக்கப் படவில்லை. இதன் நோக்கம் என்பது ஏதேனும் ஒரு சேவை வழங்கும் போது அதன் பயனாளியின் அடையாளத்தை அவரது ஒப்புதலுடன் சரி பார்ப்பது மட்டும் தான். தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு மின்னணு முறையிலும், இயல் முறையிலும் உயர்ந்த நிலையில் உள்ள சிலரால் பாதுகாக்கப்படுகிறது. தனித்துவ அடையாள ஆணையத்தின் பணியாளர்களால் கூட இந்த தகவல்களை பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பான தகவல் பெட்டகத்தில் சேகரித்து வைக்கப்படும். தகவல்களை அணுகியது குறித்த அனைத்து விவரங்களும் முறையாக பதிவு செய்யப்படும்.